மாஞ்சோலை வனப்பகுதியில் சாரல் மழை: கடனா அணை நீர்மட்டம் 78 அடியை எட்டியது
- தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.
இந்நிலையில் நேற்று அணை பகுதிகளிலும் மழை வெகுவாக குறைந்தது. இதனால் நீர்வரத்து குறைந்தது. மாவட்டத்தின் பிற இடங்களிலும் வெயில் அடிக்க தொடங்கியது. நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1317 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அந்த அணையில் இருந்து பாசனத்திற்கு 1154 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 143 அடி கொண்ட அந்த அணையில் 120.45 அடி நீர் இருப்பு உள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 130 அடியை கடந்து விட்டது. கொடுமுடியாறு அணையில் 27 அடியும், மணிமுத்தாறு அணையில் 70.73 அடியும் நீர் இருப்பு உள்ளது. மாஞ்சோலை மற்றும் காக்காச்சி எஸ்டேட்டுகளில் தலா 2 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 1 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையில் 117.50 அடி நீர் இருப்பு உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் 71 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
கருப்பாநதியில் 52.17 அடியும், ராமநதியில் 82 அடியும் நீர் இருப்பு உள்ளது. கடனா அணை நீர்மட்டம் 77.90 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 178 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.