கலாஷேத்ரா பேராசிரியர் மீது பாலியல் புகார்- முன்னாள் மாணவிகள் 5 பேரிடம் விசாரணை
- போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை தொடர்ந்து நேற்று மாலையிலேயே ஹரி பத்மன் விசாரணைக்காக போலீசில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
- ஹரி பத்மனின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டறியவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கவின்கலை கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர் மற்றும் நடன உதவியாளர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி, பேராசிரியர் ஹரி பத்மன் மீது எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் வழக்கு விசாரணைக்கு தேவையான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மாணவி அளித்திருக்கும் புகாரின் பேரில் 2019-ம் ஆண்டு பாலியல் சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன்பேரில் 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் பேராசிரியர் உடனடியாக கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேவையான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். அதன்பின்னரே கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்' என்றும் தெரிவித்தனர்.
கேரள மாணவி அளித்த புகாரில் தன்னுடன் படித்த 5 மாணவிகள் பற்றியும், அவர்களிடம் விசாரித்தால் பேராசிரியர் பற்றி பல்வேறு தகவல்கள் தெரியவரும் என்றும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அது தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர். கேரளாவை சேர்ந்த 5 முன்னாள் மாணவிகளிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
நேற்று மாலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற தனிப்படை போலீசார் கேரள மாணவிகள் 5 பேரிடமும் இன்று விசாரணை நடத்தினர். அப்போது கலாஷேத்ராவில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக மாணவிகள் பரபரப்பான தகவல்களை தெரிவித்து உள்ளனர்.
இதனை சென்னை தனிப்படை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். கேரள மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பேராசிரியர் ஹரி பத்மன் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை திரட்டி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் விரைவில் சென்னை திரும்பும் போலீசார் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கலாஷேத்ரா விவகாரத்தில் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார்கள்.
இதற்கிடையே பேராரியர் ஹரிபத்மன் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை தொடர்ந்து நேற்று மாலையிலேயே அவர் விசாரணைக்காக போலீசில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பேராசிரியர் ஹரி பத்மன் இன்று காலை வரையில் சென்னைக்கு வரவில்லை. ஐதராபாத்திலேயே அவர் தலைமறைவாக இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
ஹரி பத்மனின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டறியவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து பேராசிரியர் ஹரி பத்மன் மீதான பிடி இறுகி உள்ளது.
இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.