மாணவி மர்ம மரணம்: பள்ளி தாளாளர், செயலாளர் உள்பட கைதான ஆசிரியைகள் சேலம் சிறையில் அடைப்பு
- பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
- இதை தொடர்ந்து நேற்று வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.
இது பற்றி முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நேற்று முன்தினம் இந்த போராட்டம் கலவரமாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளியை சூறையாடி வாகனங்களுக்கு தீவைத்தனர். அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனவும், தற்போது நடைபெற்றுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்களில் தெளிவு இல்லை என்பதால் இரண்டாவது முறை மாணவியின் உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து நேற்று வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். நேற்று மாலைவரை விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் தாளாளர், ஆசிரியைகள் உள்பட 5 பேரும் மாலையில் கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து 5 பேரையும் வருகிற ஆகஸ்டு 1-தேதி வரை, சேலம் மத்திய சிறையில் அடைக்க குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 5 பேரும் இன்று அதிகாலை 2.30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதையடுத்து தாளாளர் ரவிக்குமார், பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் சேலம் மத்திய சிறையிலும், பள்ளி செயலாளர் சாந்தி, ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கிருத்திகா ஆகியோர் அருகில் உள்ள மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.