விரைவில் பொதுக்குழு கூடி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்- கே.பி.முனுசாமி
- சிலர் தர்ம யுத்தம் நடத்தினர். ஆனால் உண்மையாக தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தார்களோ அதை எடப்பாடி செய்து காட்டுவார்.
ஈரோடு:
அ.தி.மு.க. சார்பில் ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடுகின்றனர்.
ஈரோட்டில் அ.தி.மு.க. தேர்தல் பணிமனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, கருப்பணன், கே.வி.ராமலிங்கம், நத்தம் விஸ்வநாதன் அக்ரிகிருஷ்ணமூர்த்தி, கோகுல் இந்திரா, கே.பி.முனுசாமி உட்பட பலர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது. அ.தி.மு.க. மாபெரும் இயக்கம் எம்.ஜி.ஆர். ஆல் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இயக்கம். 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளோம். அப்படிப்பட்ட இயக்கத்தை போராடி எடப்பாடி பழனிசாமி இன்று மீட்டு உள்ளார். இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் மத்தியில் சட்டப் போராட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி மீட்டு உள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
சிலர் தர்ம யுத்தம் நடத்தினர். ஆனால் உண்மையாக தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தார்களோ அதை எடப்பாடி செய்து காட்டுவார். இந்த தீர்ப்பு நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் நமது வேட்பாளர் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓ.பி.எஸ். மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் முனுசாமி, நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்திருப்பது என்றால் ஓ.பி.எஸ். நீக்கப்பட்டது செல்லும் என்று தானே அர்த்தம். விரைவில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு முறைப்படி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார்.