உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சில் புகுந்து டிரைவரை சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல்- இருவர் கைது

Published On 2024-04-21 11:15 GMT   |   Update On 2024-04-21 11:15 GMT
  • காயமடைந்த டிரைவர் உள்பட 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • பஸ்சில் புகுந்து டிரைவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கும்பகோணம்:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பஸ் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருவாய்ப்பாடியை சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்த பஸ் கும்பகோணம் பாலக்கரை அருகே வந்து கொண்டிருந்த போது பஸ்சுக்கு முன்பு சிலர் தகராறில் ஈடுபட்டிருந்தனர். இதனை கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது திடீரென பஸ்சை ஏன் நிறுத்தி இருக்கிறாய்? எனக்கூறி 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பஸ்சின் உள்ளே சென்று டிரைவர் ரமேஷை சரமாரியாக தாக்கினர். இதில் ரமேஷின் மூக்கு, கண், முகம் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சை விட்டு வெளியே ஓடினர்.

அந்த கும்பல் டிரைவரை எட்டி உதைத்து கீழே தள்ளியதுடன், மேலும், 2 பேரையும் தாக்கினர். வலி தாங்காமல் டிரைவர் கூச்சலிடுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் டிரைவரை மீட்க சென்றனர். அப்போது 2 பேர் பொதுமக்களிடம் சிக்கினர்.

தகவல் அறிந்து வந்த கும்பகோணம் நகர கிழக்கு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்த சுதர்சன், ஜனார்த்தனன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரின் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

காயமடைந்த டிரைவர் உள்பட 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பஸ்சில் புகுந்து டிரைவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News