விஷவாயு தாக்கி தொழிலாளி-வாலிபர் பலி
- தொழிலாளி, வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள குலசேகரபுரம் லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ லிங்கம் (வயது 54), தொழிலாளி. இவரது மகன் செல்வா (19). நேற்று மாலை தந்தை-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த செல்வா, தனது மோட்டார் சைக்கிளை அந்தப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டாராம். இதைதொடர்ந்து அவரது தந்தை ஸ்ரீ லிங்கம், மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை மீட்க அதே பகுதியை சேர்ந்த செல்வன் (34) என்பவர் கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.
இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்க முயன்றபோது, கிணற்றுக்குள் விஷவாயு பரவி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பல மணி நேரம் போராடி நள்ளிரவு மீட்டனர். பின்னர் 2 உடல்களும் கரைக்கு கொண்டு வரப்பட்டன.
கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் கசிந்து கிணறு முழுவதும் விஷவாயு பரவி இருந்ததால் ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் மூச்சு திணறி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொட்டாரம் அருகே கிணற்றுக்குள் கிடந்த மோட்டார் சைக்கிளை மீட்கச் சென்ற தொழிலாளி-வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.