உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்தது- இருக்கன்குடி பாதயாத்திரை சென்ற 2 பெண்கள் உடல் நசுங்கி பலி

Published On 2023-08-11 03:42 GMT   |   Update On 2023-08-11 03:42 GMT
  • சாத்தூர் மெயின் ரோடு தாயில்பட்டி பகுதியில் 3 பேர், 4 பேர் என குழு, குழுவாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
  • சக பக்தர்கள் கொடுத்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு தாயில்பட்டி போலீசார் விரைந்து வந்தனர்.

தாயில்பட்டி:

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆடி பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆடி கடைசி வெள்ளியான இன்று இருக்கன்குடி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகிறார்கள். இதில் நேர்த்திக்கடனாக ஏராளமானோர் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, திருத்தங்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்து பங்கேற்றனர்.

அதேபோல் சிவகாசி அருகே உள்ள நதிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று இரவு தங்கள் ஊரில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

அவர்கள் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சிவகாசியை அடுத்த சாத்தூர் மெயின் ரோடு தாயில்பட்டி பகுதியில் 3 பேர், 4 பேர் என குழு, குழுவாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த லாரி சாலையோரமாக நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.

இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதைப் பார்த்த அவர்களுடன் வந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். இந்த கோர விபத்தில் பழனியம்மாள் (வயது 40) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவருடன் சென்ற சண்முகப்பிள்ளை (50) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

சக பக்தர்கள் கொடுத்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு தாயில்பட்டி போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சண்முகபிள்ளையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் முத்துராஜ் (38) பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக தாயில்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேரிந்த லாரி டிரைவர் லட்சுமணன் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி டிரைவர் மது போதையில் இருந்தாரா? அல்லது தூக்க கலக்கத்தில் பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தாரா? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாதயாத்திரை சென்ற இரண்டு பெண்கள் லாரி மோதி பலியானது அவர்களது சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News