பூந்தமல்லி அருகே லாரி மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற பெண் பலி
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
- விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் ரேவதியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 53). இவர் பூந்தமல்லி -பாரிவாக்கம் சந்திப்பு, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக கட்டுமான பொருட்களை ஏற்றிவந்த லாரி திடீரென சாலையோரம் நடந்து சென்ற ரேவதி மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ரேவதியின் கால்கள் இரண்டும் நசுங்கியது. இதில் அவர் அலறி துடித்தார்.
விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் ரேவதியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுபற்றி அறிந்ததும் ரேவதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் விபத்து ஏற்படுத்திய லாரியை சிறை பிடித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.