உள்ளூர் செய்திகள்

ராசிபுரம் அருகே லாரி மோதி விபத்து- பெண் போலீஸ் ஏட்டு பலி

Published On 2024-05-02 03:37 GMT   |   Update On 2024-05-02 03:37 GMT
  • பணியை முடித்துவிட்டு நேற்று இரவு 10 மணி அளவில் மொபட்டில் அமுதா வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
  • பொன்குறிச்சி நோக்கி வந்த ஈச்சர் லாரி திடீரென பெண் போலீஸ் ஏட்டு ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டியை சேர்ந்தவர் செல்வம் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அமுதா (47) இவர் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கவியரசன் (21), சோலைஅரசு (19) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

அமுதா திருச்செங்கோடு அருகே உள்ள எளையாம்பாளையம் விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

பணியை முடித்துவிட்டு நேற்று இரவு 10 மணி அளவில் மொபட்டில் அமுதா வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அவர் ராசிபுரம் அருகே உள்ள குமாரபாளையம் என்ற பகுதியில் ஒரு பேக்கரி அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே பொன்குறிச்சி நோக்கி வந்த ஈச்சர் லாரி திடீரென பெண் போலீஸ் ஏட்டு ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த பெண் போலீஸ் ஏட்டு அமுதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராசிபுரம் போலீஸ் டி.எஸ்.பி. விஜயகுமார் உள்பட போலீசார் அமுதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அமுதாவின் உறவினர்கள் நூற்றுக்கணக்கான பேர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

விபத்தில் பலியான அமுதா தடகளப் போட்டியில் பல பரிசுகளை வென்று குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News