உள்ளூர் செய்திகள்

வாடகை உயர்த்தி கேட்டு லாரி உரிமையாளர்கள் சர்க்கரை ஆலையில் போராட்டம்

Published On 2023-11-29 11:02 GMT   |   Update On 2023-11-29 11:02 GMT
  • ஆலை நிர்வாகத்திடம் வாடகை உயர்த்தி தர கோரிக்கை வைத்து வந்தனர்.
  • கோபிநாதம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குவிக்கப்பட்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே அரசுக்கு சொந்தமான கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலைக்கு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கரும்பு அரவைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த ஆலையின் அரவை சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆலை அரவை தொடங்கிய நாள் முதலாக கரும்பு லோடு ஏற்றி வரும் வாகனங்களுக்கு வாடகையை உயர்த்தி தர வேண்டுமென லாரி உரிமையாளர், பாரம் ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து ஆலை நிர்வாகத்திடம் வாடகை உயர்த்தி தர கோரிக்கை வைத்து வந்தனர்.

ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நேற்று இரவு ஆலைக்குள் லோடு ஏற்றி வந்த 150 க்கு மேற்பட்ட கனரக வாகனங்கள், அரவைக்கு இறக்கி வைக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஏ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கோபிநாதம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குவிக்கப்பட்டனர்.

உடனடியாக அரூர் டி.எஸ்.பி. ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

ஆலையில் மேலாண்மை இயக்குனர் பிரியா போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில், தங்களது கோரிக்கையை சில தினங்களில் பேச்சு வார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் இரவு 7 மணி முதல் 10 மணி வரை கரும்பு அரவை லோடு இறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்பு வழக்கம்போல ஆலைகள் செயல்பட தொடங்கியது.

இந்த திடீர் போராட்டத்தால் ஆலை வளாகப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News