உள்ளூர் செய்திகள்

6 வயது சிறுவன் உள்பட 5 பேரை சரமாரியாக வெட்டிய வாலிபர்கள்: போதையா-ஜாதி பிரச்சினையா?

Published On 2023-11-28 08:56 GMT   |   Update On 2023-11-28 08:56 GMT
  • சுதாரித்துக் கொண்ட அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
  • ஐந்து பேரை இரண்டு மர்ம நபர்கள் வெட்டியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை:

மதுரை அவனியாபுரத்தை அடுத்த பெருங்குடியில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கணபதி (வயது 28), விஜய் குட்டி (25), அஜித் (24) உட்பட இன்னும் சிலர் ஊருக்குள் உள்ள நாடகமேடை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர் அஜித் என்பவரிடம் கண்ணா எங்கிருக்கிறார் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று கூறியதையடுத்து வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பதட்டமடைந்த ஒரு சிலர் தப்பியோடினர். இதில் அஜித், விஜய் குட்டி, கணபதி ஆகியோர் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (48) என்னும் கூலித் தொழிலாளி உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தனது பேரன் சார்வின் (6) என்பவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதற்காக அந்த வழியாக வந்து கொண்டிருந்தார்.

அந்த சமயம் அங்கு கூச்சல் சத்தம் கேட்டதால் நாடகமேடை அருகே சென்றார். அப்போது அந்த 2 பேரும் பெரியசாமி மற்றும் அவரது பேரனையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக் கத்தினர் திரண்டு ஓடி வந்தனர். இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பெருங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் லதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர்.

அரிவாளால் வெட்டிய இருவரும் யார், அவர்கள் விசாரித்த கண்ணன் என்பவர் யார், ஜாதி பிரச்சினை காரணமா, அவர்களுக்குள் எதாவது முன்பகை உள்ளதா, இல்லை வந்தவர்கள் எதுவும் போதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார் ளா? என போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் ஊருக்குள் புகுந்து முன்பின் தெரியாத ஐந்து பேரை இரண்டு மர்ம நபர்கள் வெட்டியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News