உள்ளூர் செய்திகள்

ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற தலைமை ஆசிரியையை அரிவாளால் வெட்டி நகைகள் கொள்ளை

Published On 2024-04-06 08:13 GMT   |   Update On 2024-04-06 08:13 GMT
  • நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை:

மதுரை அண்ணா பேருந்து நிலையம் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரகுராஜன் மனைவி லட்சுமி (வயது 53). இவர் கணவரை பிரிந்து 20 ஆண்டுகளாக மகனுடன் வசித்து வருகிறார். இவரது மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை செய்து வருகிறார்.

லட்சுமி களிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்காக வீட்டில் இருந்து தினமும் காலையில் பள்ளிக்கு ஷேர் ஆட்டோ மற்றும் அரசு பேருந்தை பயன்படுத்தி வந்துள்ளார். தினமும் வீட்டிலிருந்து ஆட்டோ மூலம் சிவகங்கை நான்கு வழிச்சாலை சந்திப்பு வந்து அங்கிருந்து ஒரு ஆட்டோ அல்லது பஸ் மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து கிளம்பிய லட்சுமி ஆட்டோவில் விக்ரம் மருத்துவமனை சந்திப்பு அருகே வந்து அங்கிருந்து மற்றொரு ஆட்டோ மூலம் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள பள்ளியில் வேலை செய்யும் இரண்டு ஆசிரியைகள் உள்ளிட்ட நான்கு பேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர்.

மற்ற இரண்டு ஆசிரியர்களும் அவர்களது பள்ளி அருகே இறங்கிக் கொள்ள ஆட்டோவில் லட்சுமி மற்றும் அவருடன் பயணி ஒருவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவிற்கு டீசல் போடுவதாக லட்சுமியிடம் கூறிய ஆட்டோ டிரைவர் பெட்ரோல் நிலையம் செல்வதற்கு பதிலாக வேறொரு பாதையில் ஆட்டோவை ஓட்டியுள்ளார். ஏன் என்று கேட்ட லட்சுமியிடம் இது தான் குறுக்கு வழி என்று கூறிய ஆட்டோ டிரைவர் மறைவான காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது ஆட்டோவில் இருந்த இளைஞர் மற்றும் ஆட்டோ டிரைவரும் சேர்ந்து தலைமை ஆசிரியை லட்சுமியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்தனர். அவர் காதில் அணிந்திருந்த தோடு மாட்டலை கழட்டி தருமாறும் தராவிட்டால் காதை அறுத்து விடுவோம் என்று கூறியதாலும் உயிருக்கு பயந்த அவர் காது கழுத்தில் அணிந்திருந்த 9½ பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர்.

ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய லட்சுமி அங்கிருந்து தப்பி அந்த வழியாக வந்தவர்களின் உதவியுடன் கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நகைக்காக பட்டப்பகலில் தலைமை ஆசிரியை வெட்டி நகையை பறித்து சென்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து பெரும்பாலும் ஷேர் ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர். சாலை விதிகளை சில ஆட்டோக்கள் மதிக்காமலும் சாலை விதிகளை மீறுவதாலும் அதிக நபர்களை ஆட்டோவில் ஏற்றி செல்வதாகவும் பல்வேறு விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆட்டோவில் பள்ளி தலைமை ஆசிரியைக்கு நடந்த சம்பவம் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News