உள்ளூர் செய்திகள்

அதிவேக சோதனை ஓட்ட ரெயில் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற காட்சி.

மதுரை-போடி இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்: 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி ஆய்வு

Published On 2023-06-14 10:14 GMT   |   Update On 2023-06-14 10:14 GMT
  • மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வரும் ரெயிலை, போடி வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • ரெயிலை இயக்குவதற்கு முன் செய்யப்பட வேண்டிய சிக்னல் செக்கிங், என்ஜின் சோதனை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

மதுரை:

மதுரை-போடி இடையேயான 90.4 கிலோமீட்டர் தூர மீட்டர் கேஜ் ரெயில் பாதையை, அகல ரெயில் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக இந்த வழித்தடத்தில் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அகல ரெயில்பாதை அமைக்கும் பணி முதலில் தொய்வாக நடந்து வந்தது. பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. மதுரை-போடி இடையிலான மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகற்றப்பட்டு, அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது.

இந்த பணி 12 ஆண்டுகள் நடந்து வந்த நிலையில், மதுரை-தேனி இடையிலான அகல ரெயில் பாதை பணி முற்றிலும் முடிவடைந்தது. இதையடுத்து மதுரை-தேனி இடையே அமைக்கப்பட்ட அகல ரெயில் பாதையில் கடந்த ஆண்டு மே மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இதையடுத்து தேனியில் இருந்து போடி வரையிலான அகல ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்தை தொடங்குவதற்காக, அந்த வழித்தடத்தில் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. 15 கிலோமீட்டர் தொலைவிலான அந்த வழித்தடத்திலும் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முற்றிலும் முடிந்தது.

இதனால் மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வரும் ரெயிலை, போடி வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரெயிலை இயக்குவதற்கு முன் செய்யப்பட வேண்டிய சிக்னல் செக்கிங், என்ஜின் சோதனை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தென்மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினரும் தேனி-போடி இடையேயான அகல ரெயில் பாதையில் கடந்த ஜனவரி மாதம் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து பிப்ரவரி மாதம் மதுரை-போடி இடையே அகல ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மதுரை-போடி இடையே பயணிகள் ரெயில் மட்டுமின்றி, சென்னை சென்ட்ரலில் இருந்து காட்பாடி வழியாக மதுரைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் போடி வரை செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ரெயில்கள் இயக்கப்படும் நேரமும் ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அறிவித்தபடி பிப்ரவரி மாதம் மதுரை-போடி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில், நாளை (15-ந்தேதி) முதல் போடி வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் சென்னை-மதுரை இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் போடி வரை நீட்டிக்கப்படும் என்றும், இந்த ரெயில் சேவையும் நாளை முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. சென்னையில் இருந்து நாளை புறப்படும் எக்ஸ்பிரசில் நாளை மறுநாள் மதுரைக்கு வந்து தேனி செல்கிறது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், மதுரை-போடி இடையேயான அகல ரெயில் பாதையில் இன்று அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதிவேக சோதனை ஓட்ட ரெயில், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 10 மணி அளவில் புறப்பட்டது.

110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. மதியம் 11.15 மணியளவில் போடி ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு, மதியம் மதுரைக்கு வந்தடைந்தது.

அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதால் மதுரை-போடி இடையேயான வழித்தடத்தில் ரெயில் வந்து செல்லும் நேரங்களில் தண்டவாள பகுதியில் மக்கள் யாரும் செல்லக்கூடாது என்று ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்ட ரெயில் போடி வரை இயக்கப்படுவதால், தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நாளை நிறைவேற உள்ளது.

Tags:    

Similar News