மாமல்லபுரத்தில் கடல் அரிப்பை தடுக்க ரூ.9.62 கோடியில், நேர் கல் தடுப்பு அமைக்கும் பணி தீவிரம்
- ஏழு நேர்கல் தடுப்பு அமைக்கும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- பணிகளை திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி ஆய்வு செய்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்கு உள்பட்ட கொக்கிலமேடு மீனவர் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் நீண்டகாலமாக கடல் சீற்றத்தால் ஏற்படும் கடலரிப்பால், தங்களது படகு, வலை, எந்திரங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதை தடுப்பதற்காக கடற்கரை ஓரத்தில் நேர்கல் தடுப்பு மற்றும் மீன் இறங்குதளம் அமைத்து தரவேண்டும் என அரசிடம் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதற்கு அரசு 9.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது மீன்வளத்துறை சார்பில், கடலில் பாறை கற்கள் கொட்டப்பட்டு ஏழு நேர்கல் தடுப்பு அமைக்கும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதி மீனவர்களிடம் நேர்கல் தடுப்பு பணிகள் குறித்தும், அவர்களது மீன்பிடி தொழில் வளம் சார்ந்த குறைகளையும் கேட்டறிந்தார்.