வீரவநல்லூர் அருகே கண்டெய்னரில் பதுக்கி வைத்து குட்கா கடத்தியவர் கைது
- இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
- கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை செய்தபோது அதில் எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக இருந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
வீரவநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி கொண்டு வரப்பட்டு கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக வீரவநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் நேற்று நள்ளிரவில் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தினர். பின்னர் கண்டெய்னரை திறந்து சோதனை செய்தபோது அதில் எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக இருந்தது.
பின்னர் அதனை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரித்தபோது, கரூர் மாவட்டம் சமத்துவபுரத்தை சேர்ந்த சிவக்குமார்(வயது 46) என்பது தெரியவந்தது. ஆனாலும் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், கண்டெய்னரை மீண்டும் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அதில் கதவு போன்ற அமைப்பு இருந்தது.
உடனே போலீசார் அதனை திறந்து பார்த்தபோது அதற்குள் ஒரு கண்டெய்னர் இருந்ததும், அதில் மூட்டை மூட்டையாக புகையிலை உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் லாரி, 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவக்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகையிலை பொருட்களை எங்கிருந்து ஏற்றி வந்தார்? இங்கு யாருக்கு சப்ளை செய்வதற்காக கொண்டு வந்தார்? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.