பிரபல ரவுடி லிங்கம் கொலை வழக்கில் தொடர்புடையவர் கைது: 27 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்
- 27 ஆண்டுகளுக்குப் பிறகு லிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வடசேரி போலீஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அருகே உள்ள நாச்சியார் குடியிருப்பை சேர்ந்தவர் லிங்கம். பிரபல ரவுடியான இவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த லிங்கத்தை 1996-ம் ஆண்டு ஒரு கும்பல் ஜெயிலுக்குள் புகுந்து வெட்டி கொலை செய்தது. அவரது தலையை மீனாட்சிபுரம் பஸ் நிலையம் பகுதியில் வைத்துவிட்டுஅந்த கும்பல் தப்பி சென்று விட்டது.
இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் 36 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முன் விரோதத்தில் லிங்கம் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தனர். காமராஜபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரும் இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது செல்வம் தலைமறைவானார். கடந்த 27 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் செல்வம் சென்னையில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை விரைந்து சென்றனர். அங்கு செல்வத்தை கைது செய்த போலீசார், இன்று காலை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். வடசேரி போலீஸ் நிலையத்தில் செல்வத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து வடசேரி போலீஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு செல்வத்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 27 ஆண்டுகளுக்குப் பிறகு லிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.