மேட்டூர் அருகே இரு தரப்பினர் மோதல்: 3 பேர் படுகாயம்- 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது
- சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மயில்சாமி, சேது, தனுஷ், ஹரீஸ் ஆகிய 4 இளைஞர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
- போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர்:
மேட்டூர் அருகே கொளத்தூர் கோட்டை மடுவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீடு சென்ற சிறுமிகளை ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் நேற்று அந்த இளைஞர்களை அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மயில்சாமி (வயது 22) சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், சேது (20) தனுஷ் (24) ஆகிய 2 பேர் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இளைஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் கொளத்தூர் போலீசார் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் குமார், ரத்தினகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து மேட்டூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மயில்சாமி, சேது, தனுஷ், ஹரீஸ் ஆகிய 4 இளைஞர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கருங்கல்லூர், காவேரிபுரத்தில் போலீசார் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.