புதிதாக மது அருந்த வருபவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க குழு அமைப்பு- அமைச்சர் முத்துசாமி
- எந்த தவறும், பிரச்சனையும் இல்லாமல் மது விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.
- விளைநிலங்களில் மதுபாட்டில்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் புகார்களை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை தி.மு.க மாவட்ட செயலாளர் பேசியதாக வெளியான ஆடியோ தவறான ஆடியோ. இது பற்றி வழக்கு பதிவு செய்துள்ளார். அவர் அப்படிப்பட்ட நபர் அல்ல. வேண்டுமென்றே இட்டுகட்டி போடப்பட்டுள்ளது. இது விசாரணையில் உள்ளது.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் தொடங்குவது என்பது ஒரு கட்சிக்காக அவர் வேலை. அவருடைய வேலையை அவர் செய்கிறார். நாங்கள் எங்களது வேலையை செய்கிறோம்.
மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. எந்த தவறும், பிரச்சனையும் இல்லாமல் மது விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். மதுப்பழக்கம் உள்ளவர்களை உரிய முறையில் அணுகி அதில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளவும், மதுப்பழக்கத்தை அவர்களாகவே கைவிடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.
புதிதாக மது அருந்த வரும் இளம் வயதினருக்கு கவுன்சிலிங் தரப்படும். இதற்காக ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளது.
விளைநிலங்களில் மதுபாட்டில்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் புகார்களை தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்றாக டெட்ரா பேக் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மற்ற மாநிலங்களில் உள்ளதையும் பார்த்து விட்டு அதில் எது சிறந்ததோ அதை முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.