உள்ளூர் செய்திகள்

கரூரில் அமலாக்கத்துறையின் தொடரும் அதிரடி- அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அலுவலகத்திற்கு 'சீல்'

Published On 2023-06-14 07:04 GMT   |   Update On 2023-06-14 07:04 GMT
  • நோட்டீசில் எங்களது (அமலாக்கத்துறையின்) அனுமதியின்றி இந்த அலுவலகத்தை திறக்கக்கூடாது.
  • சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

கரூர்:

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்களில் கடந்த 26-ந்தேதி தொடங்கிய வருமான வரித்துறை சோதனை 8 நாட்களுக்கு பிறகு நிறைவடைந்தது.

அதில் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் அடிப்படையில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனையில் இறங்கினர். கரூரில் 8 இடங்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவில் நிறைவடைந்தது.

இதற்கிடையே கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு சொந்தமான டெக்ஸ்டைல்ஸ் நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது.

இதில் தற்போது வரை சோதனை நடத்தப்படாத நிலையில் நேற்று இரவில் அங்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை ஒட்டியுள்ளதோடு, அசோக்குமாரின் அலுவலகத்திற்கும் சீல் வைத்தனர்.

மேலும் அந்த நோட்டீசில் எங்களது (அமலாக்கத்துறையின்) அனுமதியின்றி இந்த அலுவலகத்தை திறக்கக்கூடாது. சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும். அதன் பின்னரே அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த டெக்ஸ்டைல்ஸ் அலுவலகத்தின் ஊழியர்கள், பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தை பார்த்து திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News