நாளை 15,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் உதயநிதி ஸ்டாலின்
- பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறையின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இந்த விழாவுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.