உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் டிரோன் மூலம் அமலாக்கத் துறையினர் ஆய்வு

Published On 2023-10-11 16:45 GMT   |   Update On 2023-10-11 16:46 GMT
  • போலி ரசீது, போலி க்யூ.ஆர்.கோடு பயன்படுத்தி மணல் விற்பனை செய்துள்ளதை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.
  • மணல் அள்ளிய பகுதிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் டிரோன் மூலம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது. இங்கிருந்து மணல் எடுத்து வரப்பட்டு வளையப்பட்டி சாலை செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், சட்ட விரோதமாக மணல் விற்பனை மேற்கொள்வதாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி 2 கார்களில் வந்த அமலாக்கத்துறையை சேர்ந்த 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மணல் சேமிப்பு கிடங்கில் சோதனை நடத்தினர்.

ஆற்றில் இருந்து எவ்வளவு மணல் அள்ளி வந்து சேமிக்கப்படுகிறது. எவ்வளவு மணல் விற்கப்பட்டுள்ளது. அதற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் முறையாக உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

35 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் மணல் சேமிப்பு கிடங்கு அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரசீதுகள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றில் கிடைக்கப் பெற்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்தினர்.

மேலும் போலி ரசீது, போலி க்யூ.ஆர்.கோடு பயன்படுத்தி மணல் விற்பனை செய்துள்ளதை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.

ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மணல் வழங்கப்பட்ட விபரம், ஆற்றிலிருந்து எவ்வளவு மணல் அள்ளி வரப்பட்டது, தற்போது சேமிப்பு கிடங்கில் இருப்பு விபரம், எந்தெந்த வாகனங்களுக்கு மணல் விற்பனைக்கு வழங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை செய்தனர்.

அதேபோல் அரசு நிர்ணயித்த 3 யூனிட் மணலுக்கு 7,950 ரூபாய் தொகையை விட கூடுதலாக 6,500 ரூபாய் எவ்வளவு பேரிடம் வாங்கப்பட்டது என்பது பற்றியும் விசாரணை செய்தனர்.

இந்த நிலையில் நேற்று கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள என்.புதூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் குவாரிகளை ஏலம் எடுத்த நபர்கள் எவ்வளவு மணல் அள்ளிச் சென்றுள்ளனர் என்பது குறித்து நேற்று காலை முதல் மதியம் வரை அமலாக்கத்துறையினர் ஆய்வு நடத்தி குழிகளை அளந்து பார்த்து மதிப்பிட்டனர்.

தொடர்ந்து மாலை 4 மணியளவில் 7 கார்களில் வந்த அமலாக்கத்துறையினர் 9 பேர், 2 குழுக்களாக பிரிந்து நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் காவிரி ஆற்றில் மணல் அள்ளிய பகுதிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் டிரோன் மூலம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களுடன் கோரக்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் 10 பேர் கொண்ட அளவீட்டாளர்கள், திருச்சி பொதுப்பணித்துறை உதவி கோட்ட அலுவலர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சங்கீதா ஆகியோர் வந்திருந்தனர்.

அப்போது ஆற்றுக்குள் இறங்கி அரசு அனுமதித்த அளவை விட முறைகேடாக மணல் அள்ளப்பட்டுள்ளதா? மணல் அள்ளிய குழிகளின் நீளம், அகலம், ஆழம் ஆகியவற்றை சுமார் 2 மணி நேரம் எவ்வளவு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பதை டிஜிட்டல் முறையில் கணக்கீடு செய்து அதனை குறித்துக் கொண்டனர். பின்னர் 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த சோதனையின் போது 20 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குவாரியை சுற்றி துப்பாக்கியுடன் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பொதுப்பணி துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.

கடந்த முறை அமலாக்கத்துறை மணல் குவாரிகளில் ஆய்வு நடத்தியதை தொடர்ந்து மணல் குவாரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News