பந்தலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி போலீஸ் ஏட்டு பலி
- சதீஷ் எருமாட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்கு புறப்பட்டார்.
- சதீஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40).
இவருக்கு திருமணமாகி அனிதா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகள், 1 பெண் குழந்தை உள்ளது.
சதீஷ் சேரங்கோட்டில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு செல்வது வழக்கம்.
இன்று காலை சதீஷ் எருமாட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்கு புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் எருமாடு-சேரங்கோடு சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே லாரி ஒன்று வேகமாக வந்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக லாரி சதீஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் சதீஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சேரம்பாடி போலீசார் லாரி டிரைவரான சோனமுத்து என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.