ஏற்காடு மலைப்பாதையில் சாலையோர தடுப்பில் மோதி 30 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்
- மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த தினேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்தார்.
- தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் துட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் தங்கபாலு (26). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் தினேஷ்குமார் (20) என்பவருடன் நேற்று மாலை 3 மணிக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்காட்டிற்கு சென்றனர்.
மோட்டார் சைக்கிளை தங்கபாலு ஓட்டி சென்றார். ஏற்காட்டில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு இரவு 7.30 மணியளவில் சேலம் திரும்பினர்.
அப்போது கடும் பனி மூட்டத்துடன் கூடிய லேசான மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்தபடியே இருவரும் மலைப்பாதையில் சென்றுள்ளனர். 17-வது மற்றும் 18-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது தங்கபாலுவின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த தினேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்தார். தங்கபாலு இடது காலில் முறிவு ஏற்பட்டு சாலையில் கிடந்தார்.
இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர் மற்றும் ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தங்கபாலுவை மீட்டு சிகிச்சை அளித்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் விழுந்த தினேஷ்குமாரை தேடினர். இதில் அதிர்ஷ்டவசமாக தினேஷ்குமார் தலை மற்றும் கைகளில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அவரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.