மோட்டார் சைக்கிள்-மொபட் நேருக்கு நேர் மோதல்: திருமணமான 7 நாட்களில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலி
- திருமணமாகி 7 நாட்களே ஆன நிலையில் சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அவரது குடும்பத்தினனரை மட்டுமல்லாது ஆனைகுளம் கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- விபத்து குறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த ஆனைகுளத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகன் கலையரசன்(வயது 27). கடையநல்லூர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 7-ந்தேதி தான் இவருக்கு திருமணம் நடந்தது. இவர் நேற்று பணிக்கு புறப்பட்டு சென்றார். மோட்டார் சைக்கிளில் சுரண்டை-சாம்பவர் வடகரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மொபட்டில் சாம்பவர்வடகரையை சேர்ந்த மூர்த்தி(45) என்பவர் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக கலையரசனின் மோட்டார்சைக்கிளும், மூர்த்தி வந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் கலையரசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த சுரண்டை போலீசார் கலையரசனை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 7 நாட்களே ஆன நிலையில் சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அவரது குடும்பத்தினனரை மட்டுமல்லாது ஆனைகுளம் கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.