நாமக்கல் அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளி குத்திக் கொலை
- சொத்து பிரச்சினையில் ஆறுமுகத்தின் உறவினர் ஒருவரே அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே பெரியப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35), கூலி தொழிலாளி.
இவர் நேற்றிரவு வழக்கம் போல வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் ஆறுமுகத்தை கத்தியால் கழுத்து மற்றும் மார்பு உள்பட பல பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். அவர் சத்தம் கேட்டு ஆறுமுகத்தின் மனைவி சரஸ்வதி ஓடி வந்தார். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆறுமுகத்தை பார்த்து சரஸ்வதி கதறி துடித்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர். தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மோப்ப நாய் ஸ்டபி அழைத்து வரப்பட்டது . அது வீட்டைசுற்றிலும் ஓடியது. கைேரகை நிபுணர்களும் அங்கு விரைந்து சென்று அங்கு பதிவாகி உள்ள கொலையாளியின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள.
இது குறித்து ஆறுமுகத்தின் மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்போது சொத்து பிரச்சினையில் ஆறுமுகத்தின் உறவினர் ஒருவரேஅவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. அவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் அண்ணன் முருகன்(55) கடந்த 29-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்த நிலையில் தற்போது அவரது தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முருகன் சாவுக்கும், இந்த கொலைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் உடல் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி உறவினர்கள் அதிக அளவில் அங்கு திரண்டுள்ளனர். இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.