உள்ளூர் செய்திகள்

கேரள வியாபாரிகள் வருகை குறைந்ததால் நேந்திரன் வாழைத்தார் விலை வீழ்ச்சி... விவசாயிகள் வேதனை

Published On 2024-09-13 07:03 GMT   |   Update On 2024-09-13 07:03 GMT
  • நேந்திரன் வாழைத்தார் சுமார் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கி செல்லப்படுகிறது.
  • இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை கேரள அரசு ரத்து செய்துள்ளது.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

இங்கு விளைவிக்கப்படும் நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா வாழை ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக நேந்திரன் வாழைத்தார் சுமார் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கி செல்லப்படுகிறது.

சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள், மேட்டுப்பாளையம் நால்ரோடு பகுதியில் செயல்படும் ஏல மையத்துக்கு கொண்டு வரப்பட்டு, ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இங்குள்ள வாழை விவசாயிகள் நேந்திரன் வாழையை அதிகளவில் பயிரிடுவது வழக்கம்.

இந்தநிலையில் சமீபத்தில் கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு உயிரிழப்புகளால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை கேரள அரசு ரத்து செய்துள்ளது.

இதனால் மேட்டுப்பாளையம் ஏல மையங்களுக்கு கேரள வியாபாரிகளின் வருகை வெகுவாக குறைந்து நேந்திரன் வாழைத்தார்கள் தேக்கம் அடைந்துள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, வழக்கமாக ஓணம் பண்டிகை காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு நேந்திரன் வாழைத்தார்களை வாங்கி செல்லும் கேரள வியாபாரிகள் வராததால் வாழைத்தார்கள் தேங்கி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஓணம் பண்டிகை மாதத்தில் ஒரு கிலோ நேந்திரன் வாழைத்தார் ரூ.45 முதல் ரூ.55 வரை விலை போகும்நிலையில், தற்போது கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை மட்டுமே விலை கிடைக்கிறது என்றனர்.

Tags:    

Similar News