உள்ளூர் செய்திகள்

பணிநிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

Published On 2023-07-27 11:01 GMT   |   Update On 2023-07-27 11:01 GMT
  • என்.எல்.சி.யில் 10-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் உள்ளன.
  • ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெய்வேலி:

பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் நேற்று மாலை நெய்வேலி நகரத்தில் உள்ள நேரு சிலை அருகில் இருந்து என்.எல்.சி. நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் நெய்வேலி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினா். பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் நேரு சிலை அருகில் அமர்ந்து கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தொழிற்சங்கத்தினர் கூறும்போது நேற்று இரவு 8 மணிக்குள் என்.எல்.சி. நிர்வாகம் நல்ல பதிலை கூறினால் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வோம். இல்லை என்றால் போராட்டம் தொடரும் என்றனர்.

ஆனால் இரவு 8 மணியை கடந்தும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து எந்த தகவலும் வராததால் தொழிலாளர்களின் போராட்டம் நீடித்தது. இதனால் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

இது குறித்து என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு செயலாளர் சேகா் கூறும்போது, தொழிற் சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற என்.எல்.சி. நிர்வாகம் முன்வந்தால் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற தொழிற்சங்கம் முடிவு செய்யும் என்றார்.

இதையடுத்து என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் அந்தோணிராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. என்.எல்.சி.யில் 10-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் உள்ளன. ஆனால், ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 10 மணிக்குள் முடிவு தெரியாவிட்டால் காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போலீசார், மாவட்ட நிர்வாகம், என்.எல்.சி. நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

வேலைநிறுத்தம் தொடர்ந்தால் என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

Tags:    

Similar News