என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தம்- இன்று மாலை பேச்சுவார்த்தை
- ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினருக்கு மற்ற தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது.
- சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.
நெய்வேலி:
பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந்தேதி வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள். 6-வது நாளான இன்று வரை அவர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இரவு-பகல் பாராமல் அவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினருக்கு மற்ற தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி இன்று மாலை 4 மணிக்கு கடலூரில் பேச்சுவார்த்தை நடக்கிறது. கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பாட்டால் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வரும்.