உள்ளூர் செய்திகள்

லைசென்ஸ் பெற்ற கடைகளில் மட்டுமே இனி பீடி, சிகரெட் விற்க அனுமதி- புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது

Published On 2023-05-31 10:44 GMT   |   Update On 2023-05-31 10:44 GMT
  • உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர்.
  • புகையிலை பழக்கத்தால் உடல் நலிவுற்று பணித்திறன் பாதிக்கப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்தில் 1.6 லட்சம் கோடி உற்பத்தி இழப்பும் ஏற்படுகிறது.

சென்னை:

புற்றுநோய்களுக்கு புகையிலை பொருட்களே முக்கிய காரணம் ஆகும். எனவே புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சார்பில் 1987-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் மே 31-ந்தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன் படி இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 'நமக்கு தேவை உணவு, புகையிலை அல்ல' என்ற பொருளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதையொட்டி மத்திய- மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர். புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்கள் புற்றுநோய், மாரடைப்பு, மூளை பக்கவாதம், வாய்ப்புற்று நோய், நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளிட்ட நோய்களால் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 15 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர்.

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் விளைவாக இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமானோர் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாக சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தில் 13 சதவீதம் புகையிலை பாதிப்பே காரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புகையிலை பழக்கத்தால் உடல் நலிவுற்று பணித்திறன் பாதிக்கப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்தில் 1.6 லட்சம் கோடி உற்பத்தி இழப்பும் ஏற்படுகிறது.

எனவே புகையிலை பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அதை ஏற்று உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் பீடி, சிகரெட் விற்பனைக்கு மட்டும் தனி உரிமத்தை வழங்கியுள்ளன.

இந்த நிலையில் தமிழகத்திலும் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த அது போன்ற நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வரைவு திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அதை அப்போது நடைமுறைப்படுத்த முடியவில்லை. தற்போது அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பல லட்சம் பெட்டிக்கடைகள், டீக்கடைகள் மற்றும் சிறிய மளிகை கடைகளில் பீடி, சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு பீடி, சிகரெட் விற்பனை செய்யக்கூடாது. அது தொடர்பாக அறிவிப்பு பலகைகள் கடைகளில் வைத்திருக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் அவற்றை மீறி எல்லோருக்குமே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எனவே இதை கருத்தில் கொண்டு புதிய நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமம் பெறும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு பெட்டிக்கடை, டீக்கடைகளில் தற்போது உள்ளதை போல் இனிவரும் நாட்களில் இஷ்டத்துக்கு பீடி, சிகரெட் விற்க முடியாது. லைசென்ஸ் பெற்ற கடைகளில் மட்டுமே இனி பீடி, சிகரெட் விற்க அனுமதிக்கப்படும். மேலும் அந்த கடைகளில் பீடி, சிகரெட்டை தவிர வேறு எந்த பொருட்களையும் விற்க முடியாது.

இந்த விதிகளை மீறும் பட்சத்தில் கடைகளுக்கான உரிமத்தை ரத்து செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் வரைவு திட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பீடி, சிகரெட் விற்பனையை குறைக்க முடியும். சிறுவர்களிடையே புகைப்பழக்கம் பரவாமல் இருப்பதை ஓரளவு தடுக்க முடியும். அதற்கான வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் பின்னர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அதற்கான உரிமங்களை வழங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News