அரசு பஸ்சில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.35 லட்சம் பறிமுதல்- பறக்கும் படையினர் நடவடிக்கை
- கர்நாடகா மாநிலத்திலிருந்து கோவை நோக்கி கர்நாடகா பதிவு எண் கொண்ட அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
- தொகை அதிகம் என்பதால் வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரேபாளையம் பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கர்நாடகா மாநிலத்திலிருந்து கோவை நோக்கி கர்நாடகா பதிவு எண் கொண்ட அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அரசு பஸ்சில் இருந்த ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளையும் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது பின்பகுதியில் இருந்த வாலிபர் ஒருவர் பேக் அணிந்திருந்தார். அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் ரூ.35 லட்சம் இருந்தது.
இது குறித்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கர்நாடகா மாநிலம் தாவணி கரையைச் சேர்ந்த ஹரிஷ் (வயது 32) என்பதும், கோவையில் தான் நிலம் வாங்கி உள்ளதாகவும் இடம் விற்பனை செய்த நபருக்கு இந்த பணத்தை எடுத்து செல்வதாகவும் அவர் கூறினார்.
எனினும் அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதனை சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தொகை அதிகம் என்பதால் இதுகுறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்று பணத்தை பெற்றுக்கொண்டனர்.