திருவேற்காட்டில் கூவம் ஆற்று கரையோர வீடுகளை அகற்ற நோட்டீசு: பொதுமக்கள் மறியல்
- சில பெண்கள் சாலையில் படுத்து உருண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில் தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவை கூவம் ஆற்றுக்கரையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது.
பருவமழையின் போது கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கரையோர குடியிருப்புகள் பாதிக்கப்படுவதால் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் எடுத்து வருகிறார்கள்.
இதற்காக அந்தப் பகுதியில் உள்ள வீடுகளை கணக்கெடுத்து அளவீடு செய்யும் பணியில் வருவாய்துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டனர். இதற்கு அங்கு வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வீடுகளை அகற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து திருவேற்காடு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சில பெண்கள் சாலையில் படுத்து உருண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். பின்னர் அவர்களை அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து அகற்றப்பட உள்ள வீடுகளில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.