உள்ளூர் செய்திகள்
பிளசிங் ரெவன்யூ பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2022-10-02 10:57 GMT   |   Update On 2022-10-02 10:57 GMT
  • தெருவிளக்கு வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் இந்த பகுதியை கடந்து வர எங்கள் பகுதி பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.
  • ஏற்கனவே இந்த பகுதியில் வழிப்பறி சம்பவங்களும் நடந்து உள்ளன. ரோடு குண்டும் குழியுமாக இருக்கின்றன.

ஈரோடு:

ஈரோடு நசியனூர் ரோடு, காரமடை அருகே பிளசிங் ரெவென்யு பகுதி உள்ளது. இங்கு 35 குடும்பத்தினர் கடந்த 10 வருடத்துக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

காரமடை பஸ் நிறுத்தத்தில் இருந்து பிளஸ்சிங் ரெவென்யூ பகுதி வரை கிட்டத்தட்ட 1½ கிலோ மீட்டர் தூரம் உள்ளது. தினமும் இந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்தது தான் செல்ல வேண்டும்.

இந்த பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. மேலும் தார் ரோடு, சாக்கடை வசதி, குடிநீர் வசதியும் இல்லை. இரவு நேரம் தெருவிளக்கு இல்லாததால் இந்த பகுதியில் நடந்து செல்லும்போது சில சமயம் வழிப்பறி சம்பவங்களும் நடந்து உள்ளன.

இதனையடுத்து இப்பகுதி மக்கள் தெரு விளக்கு, தார் ரோடு, சாக்கடை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி நசியனூர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ஆனால் இதுவரை அந்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிட்டத்தட்ட மனு கொடுத்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. இது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் சென்று கேட்டால் நிதி இல்லை என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து இப்பகுதி மக்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு கொடுத்தனர். ஆனால் அதற்கும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் 7 நாட்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி காந்தி ஜெயந்தியான இன்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,

நாங்கள் 10 வருடங்களுக்கும் மேலாக இந்த பகுதியில் குடியிருந்து வருகிறோம். எங்கள் பகுதியில் தெரு விளக்கு, சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தார் ரோடு வசதி எதுவும் இல்லை. காரமடை பஸ் நிறுத்தத்தில் இருந்து எங்கள் பகுதிக்கு கிட்டத்தட்ட 1½ கிலோமீட்டர் நடந்து வரவேண்டும்.

தெருவிளக்கு வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் இந்த பகுதியை கடந்து வர எங்கள் பகுதி பெண்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே இந்த பகுதியில் வழிப்பறி சம்பவங்களும் நடந்து உள்ளன. ரோடு குண்டும் குழியுமாக இருக்கின்றன.

மழைக்காலங்களில் ரோடுகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும். முறையான சாக்கடை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் நீர் தேங்கி நிற்கிறது. எனவே அடிப்படை வசதி செய்து தரக்கோரி 2 வருடமாக மனு கொடுத்து வருகிறோம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

எனவே காந்தி ஜெயந்தியான இன்று எங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இன்று முதல் தொடர்ந்து 7 நாட்கள் எங்கள் வீடு, தெருக்களில் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டு இருக்கும். இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News