கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்டதால் கும்பல் ஆத்திரம்- வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
- பெட்ரோல் குண்டு வீட்டு வாசல் முன்பு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது.
- கிச்சா என்கிற பிரவீன், சூர்யா என்கிற ஜூட் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராயபுரம்:
புது வண்ணாரப்பேட்டை தேசிய நகர் 6-வது தெருவில் வசித்து வருபர் சிவா (34).நேற்று இரவு இவரது வீட்டு வாசல் முன்பு நின்றபடி 3 வாலிபர்கள் கஞ்சா புகைத்து கொண்டு இருந்தனர்.
இதனை கவனித்த சிவாக அவர்களை கண்டித்தார். மேலும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் 3 வாலிபர்களும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்தநிலையில் நள்ளிரவு 12 மணியளவில் வந்த மர்ம கும்பல் திடீரென பெட்ரோல் குண்டை சிவாவின் வீட்டின் மீது வீசினர். இதில் அந்த பெட்ரோல் குண்டு வீட்டு வாசல் முன்பு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது.
சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வெளியே வந்ததும் பெட்ரோல் குண்டை வீசிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவா போலீஸ் கட்டுப்பாட்டு அறிக்கைக்கு தகவல் தெரிவித்தார். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் 3 வாலிபர்கள் பெட்ரோல் குண்டை வீசுவது பதிவாகி இருந்தது.
இதனை வைத்து அதே பகுதி வெங்கடேசன் தெருவை சேர்ந்த மனோஜ் குமார் என்கிற மாயாண்டி என்வரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 8 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்டதால் சிவாவின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி இருப்பது தெரியவந்தது.
இதில் தொடர்புடைய கிச்சா என்கிற பிரவீன், சூர்யா என்கிற ஜூட் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.