பண்ருட்டி அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு
- தி.மு.க. பிரமுகர் கலியமூர்த்திக்கும், அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவருக்கும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் நேரில் விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து தாசில்தார் சிவா.கார்த்திக்கேயன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள குடுமியான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. தி.மு.க. பிரமுகர். இவர் நேற்று இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கினார்.
நள்ளிரவு சமயம் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கலியமூர்த்தி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதிர்ச்சி அடைந்த கலியமூர்த்தி வெளியே வந்து பார்த்தார்.
அப்போது பெட்ரோல் குண்டுகள் வீசியது கண்டு அந்த பகுதியில் யாராவது உள்ளார்களா? என தேடினார். ஆனால் யாரும் தென்படவில்லை.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.
தி.மு.க. பிரமுகர் கலியமூர்த்திக்கும், அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவருக்கும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் நேரில் விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து தாசில்தார் சிவா.கார்த்திக்கேயன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதில் கலியமூர்த்தி பங்கேற்கவிலை. எனவே தனபால் தரப்பு திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனவே இந்த முன்விரோதத்தில் கலியமூர்த்தி வீடு மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.