இரணியல் அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவர் மரணம்
- நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆதித்யா சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை ஆதித்யா பரிதாபமாக இறந்தார்.
இரணியல்:
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆத்திவிளையை அடுத்த ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஶ்ரீ குமார். இவரது மகன் ஆதித்யா (வயது 16). இவர் மாங்குழி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் ஆதித்யா திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை ஆதித்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இரணியல் போலீசில் ஶ்ரீகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மர்ம காய்ச்சலுக்கு மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், வீதிகளில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி மரணங்கள் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதாரத்துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.