உள்ளூர் செய்திகள் (District)

அனுமதி பெறாததால் தமிழக வெற்றிக்கழகம் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சிக்கு தடை விதித்த போலீசார்

Published On 2024-09-29 09:15 GMT   |   Update On 2024-09-29 09:15 GMT
  • 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
  • கட்சி நிர்வாகிகளுடன் டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஈரோடு:

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வரும் அக்டோபர் மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்தினர் கட்சிக் கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.

இதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட ராஜாஜிபுரத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கட்சி கம்பம் நடப்பட்டது. கட்சிக்கொடி மட்டும் ஏற்றப்படாமல் இருந்தது. கம்பம் நடுவதற்காக மாநகராட்சியில் கட்சி நிர்வாகிகள் அனுமதி கடிதம் அனுப்பி இருந்தனர்.

ஆனால் பதில் வரவில்லை. பின்னர் மீண்டும் தமிழக வெற்றிக்கழகத்தினர் நினைவூட்டம் கடிதம் அனுப்பி இருந்தனர். அதற்கும் பதில் வரவில்லை. இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தமிழக வெற்றிக்கழகத்தினர் கம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்து. நேற்று மாலை 6.30 மணி அளவில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கட்சிக்கொடியேற்றுதல் நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பதால் நாளை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று கூறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

தமிழக வெற்றிக்கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அங்கு கூடினர். அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து டவுன் டி.எஸ்.பி. முத்துக்குமரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அப்போது கட்சி நிர்வாகிகளுடன் டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரன் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பதால் நிகழ்ச்சி நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதற்கு கட்சி நிர்வாகிகள் நாங்கள் அனுமதி கடிதம் கொடுத்தும் இதுவரை பதில் வரவில்லை. அனுமதி கடிதம் ஆவணங்களை உங்களிடம் காட்டுகிறோம் என்று கூறி செல்போனில் ஆவணங்களை காட்டினர்.

ஆனால் இது செல்லுபடியாகது. முறைப்படி அனுமதி கடிதம் பெற்றால் தான் நிகழ்ச்சி நடத்த முடியும். மீறி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது டவுன் டி.எஸ்.பி.யிடம் கட்சி நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரவு 9.30 மணி வரை இந்த பிரச்சனை நீடித்தது.

பின்னர் ஒரு வழியாக சமாதானமாகி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உரிய அனுமதி பெறாமல் எந்தவித நிகழ்ச்சியும் நடத்தப்படமாட்டது என்றும் மீறி நடக்கும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவதாக கட்சியினர் கடிதம் மூலம் உத்தரவாதம் அளித்தனர்.

இதனை ஏற்று போலீசார் கலைந்து சென்றனர். எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Tags:    

Similar News