கன்னியாகுமரி லாட்ஜில் மாணவருடன் ஓரினச்சேர்க்கை- பேராசிரியர் மீது வழக்கு
- குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாணவன் புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க கன்னியாகுமரி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
- பேராசிரியர் ரவிக்குமார் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
அந்த கல்லூரியில் ரவிக்குமார் என்பவர் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கல்லூரியில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அப்போது லாட்ஜில் வைத்து பேராசிரியர் ரவிக்குமார் மாணவரிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதுடன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவன் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இந்த நிலையில் கும்பகோணம் சுவாமி மலை போலீசிலும் புகார் செய்தார். இது தொடர்பாக ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் நடந்த இடம் கன்னியாகுமரி என்பதால் இந்த வழக்கை கன்னியாகுமரியில் விசாரிக்க தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாணவன் புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க கன்னியாகுமரி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், பேராசிரியர் ரவிக்குமார் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.