உள்ளூர் செய்திகள்

வினோத்குமார்.

அனைவரது பணத்தையும் வாங்கி கொடுங்கள்- கடிதத்துடன் செல்பி எடுத்து தூக்கில் தொங்கிய நிதி நிறுவன ஏஜெண்டு

Published On 2022-08-08 10:20 GMT   |   Update On 2022-08-08 10:20 GMT
  • பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தில் இருக்கும் நிதி நிறுவன இயக்குனர்கள் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
  • அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பணம் வழங்காதது குறித்து ஏஜெண்டு வினோத்குமாரிடம் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன்-இந்திரா தம்பதியரின் மகன் வினோத்குமார் (வயது 28). இவர் வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தற்போது மோசடி புகாரில் சிக்கியுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். மேலும் ஏஜெண்டாக இருந்து வந்துள்ளார்.

இவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என சுமார் 30-க்கும் அதிகமான நபர்களிடமிருந்து சுமார் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை பெற்று மாத வட்டி தரும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு வட்டி பணம் கிடைக்கவில்லை. நிதி நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் ஏஜெண்டுகள் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில் நிதி நிறுவன அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. காட்பாடியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தில் இருக்கும் நிதி நிறுவன இயக்குனர்கள் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பணம் வழங்காதது குறித்து ஏஜெண்டு வினோத்குமாரிடம் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவல் அறிந்த திருவலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல முடியாத விரக்தியில் வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் வினோத்குமார் எழுதி வைத்த கடிதத்தையும் பறிமுதல் செய்தனர். அந்த கடிதத்தில், நிதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பான்கார்டு எண்ணை குறிப்பிட்டு, இவர்களின் பெயரில் இயங்கும் நிதி நிறுவனத்தில் என்னிடம் கேட்ட நபர்களுக்கு முதலீடு செய்து கொடுத்துள்ளேன். இப்போது அவர்கள் இல்லை என்பதால் எனது மற்றும் என்னை சார்ந்தவர்களின் பணத்தை திருப்பி வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் கொடுத்த பணத்தின் ஆவணங்கள் அனைத்தும் எனது ஆன்லைன் புக்கில் உள்ளது.

என்னை நம்பியவர்களுக்கு எனது முடிவிலாவது பணம் கிடைக்கட்டும். அனைத்து ஆவணங்களும் எனது பேங்கில் உள்ளது.

போலீஸ் இவர்களை பிடித்து அனைவரின் பணத்தையும் வாங்கி தர வேண்டும்.

முதலீடு செய்த அனைவரும் அந்நிறுவனத்திடம் பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். கடிதத்துடன் செல்பி எடுத்த பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வினோத்குமாரின் வீட்டில் இருந்த பாண்டு பத்திரங்கள், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

முதலீட்டாளர்கள் தற்கொலை போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News