உள்ளூர் செய்திகள் (District)

பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.40 லட்சத்தை அபேஸ் செய்த மர்மநபர்

Published On 2024-09-21 09:41 GMT   |   Update On 2024-09-21 09:41 GMT
  • வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க திட்டமிட்ட அந்த நபர் டம்மி ஏ.டி.எம். கார்டை வசந்தாவிடம் கொடுத்து விட்டு அவரது கார்டை எடுத்து கொண்டார்.
  • ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அந்த நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

சேலம்:

சேலம் காமநாயக்கன்பட்டி ராஜா பட்டறையை சேர்ந்தவர் மகேந்திரன், இவரது மனைவி வசந்தா (58), இவர்களுக்கு தினேஷ் என்ற மகனும், நிஷாந்தி என்ற மகளும் உள்ளனர். தினேஷ் தனியார் நிறுவனத்தில் டிரைவராக உள்ளார். நர்சாக பணி புரிந்து வரும் நிஷாந்தி சேலத்தில் உள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார். கணவர் இறந்து விட்டதால் வசந்தாவும், அதே கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வருவதுடன் மகளுடன் தங்கி உள்ளார்.

இவர்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட திட்டமிட்ட வசந்தா, பி.எப். பணத்தை எடுக்க விண்ணப்பித்திருந்தார். கடந்த 12-ந் தேதி அவரது வங்கி கணக்கிற்கு பணம் வந்தது. நேற்று முன்தினம் மாலை சாரதா கல்லூரி சாலையில் அழகாபுரம் போலீஸ் நிலையம் அருகே உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்தில் 500 ரூபாயை எடுக்க முயன்றார்.

அப்போது அவரது பின்னால் நின்றிருந்த ஒருவர் எந்திரத்தில் கை வைத்த படி வசந்தாவை நகரும் படி கூறினார். தொடர்ந்து ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த வசந்தாவின் ஏ.டி.எம். கார்டை எடுத்து விட்டு டம்மியான ஒரு ஏ.டி.எம். கார்டை வசந்தாவிடம் கொடுத்தார். அதனை கவனிக்காத வசந்தா அந்த கார்டையும், 500 ரூபாயையும் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றார்.

சற்று நேரத்தில் வசந்தாவின் வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட அவரது மகள் நிஷாந்தியின் செல்போனுக்கு அடுத்தடுத்து 2 லட்சம் ரூபாய் எடுத்ததற்கான குறுந்தகவல் வந்தது. உடனே வசந்தாவை தொடர்பு கொண்டு மகள் கேட்ட போது 500 ரூபாய் மட்டுமே எடுத்ததாக கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நிசாந்தி மற்றும் வசந்தா ஆகிய 2 பேரும் அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். அப்போது வங்கி கணக்கை முடக்கி விட்டோம், நாளை வந்து புகார் கொடுங்கள் என்று கூறி அனுப்பினர். ஆனால் நேற்று காலை 8 மணிக்கு மீண்டும் அடுத்தடுத்து ரூ. 40 ஆயிரம் பணம் எடுத்ததாக குறுந்தகவல் வந்தது.

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த வசந்தா கண்ணீர் மல்க கதறிய படி அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். புகாரை வாங்கிய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்திய போது, ஏ.டி.எம். மையத்தில் வசந்தா பணம் எடுக்க முயன்ற போது பின்னால் நின்றிருந்த நபர் ஏ.டி.எம்.கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை பார்த்துள்ளார்.

தொடர்ந்து அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க திட்டமிட்ட அந்த நபர் டம்மி ஏ.டி.எம். கார்டை வசந்தாவிடம் கொடுத்து விட்டு அவரது கார்டை எடுத்து கொண்டார்.

பின்னர் அந்த ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை எடுத்தார். வை-பை கார்டு என்பதால் ஒரே நாளில் அதிக அளவில் பணத்தை அந்த நபர் எடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் வாங்கி பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து சென்ற நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளார்.

தொடர்ந்து அவர் பணம் எடுத்த ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அந்த நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். விரைவில் அவர் சிக்குவார் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். 

Tags:    

Similar News