காணும் பொங்கல் கொண்டாட அனுமதி மறுப்பு
- பொதுமக்கள் அணைக்கட்டு பகுதிக்கு வந்து பொழுதுபோக்கி காலை முதல் மாலை வரை கொண்டாடுவது வழக்கம்.
- காணும் பொங்கலை கொண்டாட காத்திருந்த பொது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பவானி:
பவானி அருகில் உள்ள காளிங்கராயன்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே காளிங்கராயன் அணைகட்டு கட்டப்பட்டு உள்ளது. இந்த அணை கட்டில் இருந்து பவானி ஆற்றின் இருந்து வெளியேறும் உபரிநீர் காலிங்கராயன் வாய்க்கால் வழியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாய நிலத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
காலிங்கராயன் என்ற சிற்றரசரின் மூலம் கட்டப்பட்ட இந்த வாய்க்கால் பல ஆண்டுகளுக்கு முன்பு நீர் மேலாண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் தைத்திருநாள் முடிந்த பிறகு பொதுமக்களால் கொண்டாடப்படும் கரிநாள் மற்றும் காணும் பொங்கல் அன்று பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் அணைக்கட்டு பகுதிக்கு வந்து பொழுதுபோக்கி காலை முதல் மாலை வரை கொண்டாடுவது வழக்கம்.
இந்த அணைக்கட்டு பகுதியில் அவிநாசி அத்திக்கடவு திட்ட பணிகள் துவக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பு நலனுக்காக பொதுமக்கள் யாரும் அணைகட்டு பகுதிக்குள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டாவது அனுமதி கிடைக்கும் என காத்திருந்த பொது மக்களுக்கு 3-வது ஆண்டாக இந்த ஆண்டும் பாதுகாப்பு நலன் கருதி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சித்தோடு போலீசார் தெரிவித்துள்ளனர். காணும் பொங்கலை கொண்டாட காத்திருந்த பொது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.