உள்ளூர் செய்திகள் (District)

கோவிலுக்குள் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி கைது

Published On 2024-09-26 05:52 GMT   |   Update On 2024-09-26 05:52 GMT
  • பெரியகுளம் வடகரை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
  • பூசாரி திலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திலகர் (வயது 70) என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை கோவில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கி கோவிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி பதறி அடித்து கோவிலில் இருந்து வெளியே வந்து நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவில் முன்பாக திரண்டனர். இதனை சற்றும் எதிர்பாராத பூசாரி அவர்கள் தன்னை தாக்கி விடுவார்கள் என எண்ணி கோவிலை பூட்டிக் கொண்டு உள்ளே ஒளிந்து கொண்டார்.

இதனை அடுத்து பெரியகுளம் வடகரை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கோவிலுக்குள் ஒளிந்திருந்த பூசாரியை வெளியே அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் பூசாரியை தாக்க முயன்றனர். இதனையடுத்து போலீசார் கோவில் பூசாரி திலகரை பெரியகுளம் வடகரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பூசாரி திலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பக்தர்கள் வழிபடும் கோவிலிலேயே குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News