உள்ளூர் செய்திகள்

செல்போன் டவர் அமைப்பதை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2023-06-10 07:55 GMT   |   Update On 2023-06-10 07:55 GMT
  • செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
  • பொதுமக்கள் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் புகார் மனு அளித்தனர்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த புதுவாயல், வில்லியர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் வில்லியர் காலனி அருகே உள்ள நிலத்தில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் கூறுகையில், 'செல்போன் டவர் அமைப்பதால், வில்லியர் காலனியில் இருந்து வெளியேறும் மழை நீர் கால்வாய் அடைபட்டு விட்டது. மேலும் இந்த செல்போன் டவர் விதிமுறைகளை பின்பற்றாமல், அதை சுற்றி போதுமான இடைவெளிவிடாமல் கிராமத்தில் உள்ளவர்களுக்கு பிரச்சனை விளைவிக்கும் வகையில் நிறுவப்படுகிறது.

இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருவதால் செல்போனால் ஏற்படும் கதிர்வீச்சுக்கு ஆளாகி உடல் உபாதைகள் ஏற்படுகிறது' என்று குற்றம்சாட்டினார்கள்.

இந்த நிலையில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் பொதுமக்கள் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் புகார் மனு அளித்தனர்.

Tags:    

Similar News