பிரதமர் மோடி வருகையையொட்டி போலீஸ் கட்டுப்பாட்டில் அம்பாசமுத்திரம்
- பிரதமர் மோடி வருகையையொட்டி அம்பை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
- ஹெலிபேடு உள்ள மைதானம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
17-ந்தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில், தேசிய கட்சிகள் மற்றும் மாநிலத்தின் பிரதான கட்சிகளின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய கட்சியான பா.ஜனதா இந்த பாராளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வலுவான கூட்டணி அமைத்து பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது.
பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட்டு பரப்புரை செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடி ஏற்கனவே 7 முறை தமிழகத்திற்கு வந்து பா.ஜனதா-கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய நிலையில் தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாளை(திங்கட்கிழமை) தமிழகத்திற்கு மீண்டும் வருகிறார். அவர் நெல்லை மாவட்டம் அம்பையில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.
நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 4 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்து பேசுகிறார்.
நாளை மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அம்பை வரும் பிரதமர் மோடி அகஸ்தியர்பட்டியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் ஹெலிபேடில் வந்திறங்குகிறார்.
அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு குண்டு துளைக்காத காரில் செல்லும் பிரதமர் மோடி பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு மேடைக்கு செல்கிறார். அங்கு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி அம்பை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருபுறம் பள்ளி மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வரும் நிலையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ஹெலிபேடு உள்ள மைதானம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. அங்கு சுற்றிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அந்த இடத்திற்கு வெளியாட்கள் யாரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
அம்பை பொதுக்கூட்ட மேடையில் இருந்து சுற்றிலும் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு டிரோன்கள் பறப்பதற்கு இன்றும், நாளையும் தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்த பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மோடி வருகைக்காக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து நேற்று முதல் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், இன்றும் நாளையும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு சுமார் 5 ஆயிரம் பேர் அம்பையில் முகாமிட்டுள்ளனர். இதுதவிர வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்பநாய் பிரிவு அதிகாரிகளும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாளை அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மோடியின் வருகையையொட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.