பொன்னேரி அருகே மணல் லாரியை சிறைபிடித்து பொது மக்கள் போராட்டம்
- மணல் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பள்ளி நேரங்களில் லாரிகள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கோளூர் ஏரியில் சவுடு மண் குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, திருப்பாலைவனம், ஏலியம்பேடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று வருகின்றன.
பொன்னேரி அடுத்த பெரியகாவனம் பகுதியில் மணல் ஏற்றிசெல்லும் லாரிகளால் சாலைகள் சேதம் அடைந்து வருவதுடன் போக்கு வரத்து நெரிசல், மாசு, காரணமாக காலை-மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
மேலும் லாரிகளில் அளவுக்கு அதிகமான சவுடு மண் ஏற்றி செல்லும் போது அதனை தார்பாய்மூலம் மூடாமல் செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிப்பதாகவும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் கவுன்சிலர் செந்தில்குமார் தலைமையில் மணல் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணி முதல் 10 மணி வரை பள்ளி நேரங்களில் லாரிகள் செல்லக்கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தாசில்தார் மதியழகன், இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி நேரங்களில் லாரிகள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.