உள்ளூர் செய்திகள்

ரவிச்சந்திரன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு 8-வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Published On 2022-06-16 05:07 GMT   |   Update On 2022-06-16 05:07 GMT
  • தாயார் ராஜேஸ்வரிக்கு மருத்துவச் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது.
  • பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, ரவிச்சந்திரன் கடந்த மாதம் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

எட்டயபுரம்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள சூரப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஆவார்.

இவரது தாயார் ராஜேஸ்வரிக்கு மருத்துவச் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது. இதைத்தொடர்ந்து ரவிச்சந்திரன் சூரப்பநாயக்கன்பட்டிக்கு சென்று தங்கினார்.

அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை, ஓய்வு தேவை என்ற அடிப்படையில் டிசம்பர் 17-ந் தேதியில் இருந்து அடுத்தடுத்து பரோல் நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனையில் அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அவருக்கு இதய பாதிப்பு, மன அழுத்தம் இருப்பதால் கூடுதல் ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பை மேலும் நீட்டிக்குமாறு அவரது தாயார் மற்றும் வழக்கறிஞர் திருமுருகன் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இன்றுடன் பரோல் முடிவடைந்து சிறைக்கு செல்ல இருந்தார்.

இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு மருத்துவர்களின் ஆலோசனையின்படி ஓய்வு தேவைப்படுவதால் தமிழக அரசு 8-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி உள்ளது.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, ரவிச்சந்திரன் கடந்த மாதம் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News