உள்ளூர் செய்திகள்

பெங்களூரு உணவகத்தில் குண்டு வெடிப்பு வழக்கு: தேவிபட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

Published On 2024-03-27 09:43 GMT   |   Update On 2024-03-27 09:43 GMT
  • இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் சேர வலியுறுத்தியதாகவும், கடற்கரை பகுதியில் வைத்து அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
  • சேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பனைக்குளம்:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற ராமேசுவரம் கபே உணவகத்தில் கடந்த மாதம் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று 5 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவில் உள்ள ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் இன்று காலை சுமார் 7 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமையில் சோதனை நடைபெற்றது.

சேக் தாவூத் மீது கடந்த 2018 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகள் ஆயுதங்கள் வைத்திருந்தால், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு பண பரிவர்த்தனை செய்தது, இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து பயிற்சி அளித்தது உள்ளிட்ட வழக்குகளில் தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் பெங்களூரு ராமேசுவரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் இவர் இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் சேர வலியுறுத்தியதாகவும், கடற்கரை பகுதியில் வைத்து அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. சேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News