உள்ளூர் செய்திகள்

களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

Published On 2024-01-08 11:34 GMT   |   Update On 2024-01-08 11:34 GMT
  • மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.
  • அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்தததால் நீர் திறப்பு குறைந்தது.

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணை பகுதிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவருவதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இரவில் மழை குறைந்ததால், இன்று தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பகலில் கனமழை நீடித்த நிலையில், இரவில் மழை சற்று தணிந்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 39 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 35 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 30 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 19 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

சில நாட்களாக பாபநாசம் உள்ளிட்ட அணை பகுதிகளில் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் உபரியாக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்தது. நேற்று சுமார் 7 ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் 2 கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது.

இந்நிலையில் நேற்று மலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்தததால் நீர் திறப்பு குறைந்தது. இன்று காலை நிலவரப்படி பிரதான அணையான பாபநாசம் அணைக்கு 2,171 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 3,624 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

118 அடி கொண்ட மணிமுத்தாறு அணைக்கு 1,592 கனஅடி வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து 1,028 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீரின் அளவு குறைந்தது. மாவட்டத்தில் சேரன்மகா தேவி, கன்னடியன் கால்வாய் பகுதி, அம்பை ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடனா நதி அணைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 27 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. ஆய்க்குடி, தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் தொடங்கி இரவு வரையில் தொடர்ந்து சாரல்மழை பெய்த வண்ணம் உள்ளது.

சிவகிரியில் லேசான சாரல் மழை பெய்தது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்குள்ள மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

Tags:    

Similar News