4 பெண் குழந்தைகளை பெற்ற பெண் கருத்தடைக்கு மறுப்பு- டாக்டர்கள் சமரசம் செய்தும் ஏற்கவில்லை
- மீண்டும் குழந்தை பிறந்தால் உங்களுக்குதான் கஷ்டம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
- 2 குழந்தைகள் இருந்தாலே தற்போதைய காலகட்டத்தில் அவர்களை வளர்த்து வேலை வாங்கி கொடுப்பது என்பது சவாலான காரியம்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொம்பேறிபட்டி ஊராட்சி மலைப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஆண்டியம்மாள் (34). இவர்களுக்கு முறையே 9,7,5 வயதுகளில் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 4வது முறையாக கருவுற்ற ஆண்டியம்மாள் கடந்த வாரம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
அவரது குழந்தை பிறப்பு குறித்த விவரம் அறிந்த திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் ஆண்டியம்மாளை கருத்தடை செய்து கொள்ளுமாறு கூறினர். ஆனால் எங்கள் ஊரில் இதுபோன்ற பழக்கம் கிடையாது. எனவே நான் கருத்தடை செய்துகொள்ள மாட்டேன் என கூறினார். கூலி வேலை பார்க்கும் உனது கணவரால் 4 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு எவ்வாறு சமாளிப்பீர்கள்.
மீண்டும் குழந்தை பிறந்தால் உங்களுக்குதான் கஷ்டம் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதற்கு ஆண்டியம்மாள் எங்கள் வாரிசாக ஆண்பிள்ளை பிறந்தவுடன் கருத்தடை செய்து கொள்கிறேன். அதுவரை கருத்தடை செய்து கொள்ள மாட்டேன் என தெரிவித்தார். டாக்டர்கள், செவிலியர்கள் என அனைவரும் அறிவுரை கூறியும், ஆண் குழந்தை பிறக்கும் வரை கருத்தடை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என உறுதியாக கூறிவிட்டார்.
இதுகுறித்து அவரது கணவரிடம் பேசியபோதும் அதே கருத்தை தெரிவித்தார். இதனால் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு வார்டில் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்த மற்ற பெண்களும் ஆண்டியம்மாளிடம் அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை.
2 குழந்தைகள் இருந்தாலே தற்போதைய காலகட்டத்தில் அவர்களை வளர்த்து வேலை வாங்கி கொடுப்பது என்பது சவாலான காரியம். இதன் காரணமாகவே தமிழக அரசு கருத்தடை அவசியத்தை வலியுறுத்தி வருகிறது. ஆனால் கிராமப்புற பெண்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. பயம் மற்றும் அறியாமை காரணமாக கருத்தடைக்கு மறுத்து வருகின்றனர். மேலும் ஆண் குழந்தைதான் குடும்ப வாரிசு என்று நினைக்கின்றனர். இதுபோன்ற சிந்தனை மாறவேண்டும். எந்த குழந்தையாக இருந்தாலும் தங்களால் வளர்த்து சாதனையாளராக்க முடியும் என்ற எண்ணம் வளரவேண்டும் என்றனர்.