நிலக்கரி சுரங்கம் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவிப்பு
- காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து இருந்தது.
இதற்காக ஒரத்த நாடு அருகே உள்ள வடசேரி, அரியலூர் மாவட்டத்தில் மைக்கேல் பட்டி, சேத்தியாதோப்பு ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை ஏல அறிவிப்பை வெளியிட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்போகும் உள்ள தகவல் தெரிந்தும் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அனைத்து அரசியல் கட்சியினரும் இதை கடுமையாக எதிர்த்தது அறிக்கை வெளியிட்டனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவை கை விட வேண்டும் என்றும் இதற்காக அறிவிக்கப்பட்ட 3 நிலக்கரி சுரங்கம் டெண்டரையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் டி.ஆர்.பாலு எம்.பி. மூலம் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியுடன் தொடர்பு கொண்டு பேசுமாறு கேட்டுக்கொண்டார். அந்த சமயத்தில் மத்திய மந்திரி ஜோஷி வெளியூரில் இருந்ததால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அதற்கு மத்திய மந்திரி கூறுகையில் தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் உங்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த சமயத்தில் தமிழக சட்டசபையில் பா.ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் பேசும் போது, காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தினார்கள்.
அப்போது இது தொடர்பாக பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு இது தொடர்பாக எழுதிய கடிதம் பற்றி விரிவாக பேசி விளக்கம் அளித்தார். அதோடு காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார்.
இதே சமயத்தில் டெல்லி சென்று இருந்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையும் நிலக்கரி துறை மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை சந்தித்து தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை மனு அளித்தார். அவரிடமும் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய மந்திரி உறுதி அளித்து இருந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசின் நிலக்கரி சுரங்க ஏலப்பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளை நீக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூட்டாட்சியின் உணர்விலும் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டும் 3 நிலக்கரி சுரங்க ஏலத்தில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறி உள்ளார்.
இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும் டுவிட்டரில் பதிவு போட்டுள்ளார். இதற்கு அண்ணாமலையும் நன்றி தெரிவித்து உள்ளார். அதில் அவர் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் ஜோஷியும் நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டு இருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி உள்ளார்.