பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தலையில் கல்லைப்போட்டு ரவுடி படுகொலை
- பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே விக்கியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாணை நடத்தி வருகிறார்கள்.
திருநின்றவூர்:
சோழவரத்தை சேர்ந்தவர் விக்கி (வயது32). ரவுடி. இவர் மீது சோழவரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் ஆவடியை அடுத்த புதிய கன்னியம்மன் நகர் மாந்தோப்பில் தலையில் கல்லைப்போட்டு விக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை மற்றும் முகம் முழுவதும் அடையாளம் தெரியாத வகையில் சிதைந்து காணப்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
கொலை நடந்த இடத்தில் ஆவடி துணை கமிஷனர் பாஸ்கர், உதவி கமிஷனர் அன்பழகன், ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இடத்தின் அருகே கேக் வெட்டப்பட்டு சிதறி கிடந்தது. மேலும் மதுபாட்டில்களும் கிடந்தன.
எனவே இரவு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே விக்கியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ரவுடி விக்கியுடன் தொடர்பில் உள்ள நண்பர்கள் யார்? யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். நேற்று இரவு விக்கி புதிய கன்னியம்மன் நகரில் உள்ள உறவினர் ஒருவரை சந்திக்க வந்ததாக தெரிகிறது. அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
ரவுடி முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.